Breaking News
Home / பொழுதுபோக்கு / அவள் திரைப்பட விமர்சனம்

அவள் திரைப்பட விமர்சனம்

அவள் திரைப்பட விமர்சனம்

அவள் திரைப்பட விமர்சனம்:

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சித்தார்த், ஆன்ட்ரியா, அனிஷா ஏஞ்சலினா

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணா

தயாரிப்பு: சித்தார்த்

இயக்கம்: மிலிந்த் ராவ்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் வழி பேய்ப் படங்கள் எடுப்பதுதான். ஏனோ தானோ என்றல்ல… பக்காவாக, கற்பனை என்று தெரிந்தும் கேள்வி கேட்க முடியாதபடி இறுகக் கட்டிய திரைக்கதையுடன் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாக தமிழில் காமெடி பேய்ப் படங்கள்தான் பெரிதாகப் போகின்றன. ஹாலிவுட் டைப்பில் சீரியஸ் பேய்ப் படங்கள் வருவது குறைவுதான். அவள் படமாவது அந்தக் குறையைப் போக்கியிருக்கிறதா?

பார்க்கலாம்.

சித்தார்த் – ஆன்ட்ரியா தம்பதியினர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு மலைப் பகுதியில் வசிக்கிறார்கள். சித்தார்த் ஒரு திறமையான மருத்துவர். மகிழ்ச்சியான வாழ்க்கை. பக்கத்தில் மூடிக் கிடக்கும் ஒரு வீட்டுக்கு குடிவருகிறார்கள் அதுல் குல்கர்னியும் அவர் மகள் அனிஷா ஏஞ்சலினா விக்டரும். இரு குடும்பங்களுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அனிஷாவுக்கு சித்தார்த் மீது காதல். ஒரு விருந்தின்போது, அனிஷாவுக்கு போதை அதிகமாகிவிட, தாறு மாறாக நடக்கிறாள், கிணற்றில் குதிக்கிறாள். சித்தார்த்தான் காப்பாற்றுகிறார். அவரை சிகிச்சைக்காக மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.

அந்த நேரத்தில் இருவர் வீட்டிலும் சில அமானுஷ்ய சமாச்சாரங்கள் நடக்கின்றன. இறந்து போனவர்களின் உருவங்கள் தெரிகின்றன. வீட்டில் வேறு ஏதாவது சக்தி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பாதிரியார், எக்ஸ்பர்ட்களை வரவைக்கிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறதா? அனிஷா ஏன் அப்படி நடந்து கொள்கிறாள்? த்ரில்லிங் க்ளைமாக்ஸ்!

காமெடி, பாடல்களே இல்லாமல் ரொம்ப நாளைக்குப் பிறகு பயமுறுத்தும் பேய்ப் படம். தியேட்டர்களில் அலறல் சத்தம் கேட்கும் அளவுக்கு ஒரு பேய்ப் படம் என்றால் அவள்தான். குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய பகுதி.

சித்தார்த் மிகக் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார். அளவாக, உறுத்தலில்லாமல் பர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார். அவருக்கும் ஆன்ட்ரியாவுக்கான ரொமான்ஸ் பர்ஃபெக்ட்.

ஆன்ட்ரியாவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போன்ற வேடம். ஜஸ்ட் லைக் தட் பின்னியிருக்கிறார்.

ஆனால் படத்தின் நிஜ சுவாரஸ்யம் அனிதா ஏஞ்சலினா விக்டர்தான். கலக்கிட்டார்.. ஸாரி, மிரட்டிட்டார். படத்தைத் தாங்கிப் பிடிப்பதில் அவரது பாத்திரம், நடிப்புக்கு முதலிடம் தரலாம்.

அதுல் கல்கர்னி, பிரகாஷ் பேலவாடி, சுரேஷ், அவினாஷ் ரகுதேவன் ஆகியோரின் நடிப்பும் இயல்பாக உள்ளது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழுதி இருப்பவர் சித்தார்த்தான். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை என்பதால், ஒருவித உயிர்ப்புடன் உள்ளது படம்.

காதல் 2 கல்யாணம் படம் இயக்கிய மிலிந்த் ராவின் இரண்டாவது படம் இது. பொதுவாக இரண்டாவது படத்தில்தான் பெரும்பாலும் சொதப்புவார்கள். இவர் முதல் படத்தில் சறுக்கி, இரண்டாவது படத்தில் கலக்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close