Breaking News
Home / வரலாறுகள் / தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு

தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு:

தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

இளமை

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.

கல்வி

தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.

தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய ‘இயற்கைச் சோதனைத் தத்துவம் ‘ (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின்செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.

பணி

1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே – பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close