Breaking News
Home / செய்திகள் / திட்டம்போட்டு காய் நகர்த்தும் கமல்.. அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு தகவல்கள்!

திட்டம்போட்டு காய் நகர்த்தும் கமல்.. அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு தகவல்கள்!

திட்டம்போட்டு காய் நகர்த்தும் கமல்.. அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு தகவல்கள்!

திட்டம்போட்டு காய் நகர்த்தும் கமல்.. அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு தகவல்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஓட்டு அரசியலில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக்கொள்ள காலம் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. அரசியல் வட்டாரங்களில் தனக்கென ஆட்களை வைத்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் இன்று அதுகுறித்து ஒரு ஆரூடத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கருத்தில் கொண்டு நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதே பல தைரியமான கருத்துக்களை அவர் எடுத்துரைத்தார்.

டிவிட்டரில் அவரது கருத்துக்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இருக்கிறது.

வீடுகளுக்குள் கமல்

‘டிவிட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்தால் அது படித்த, மேல்தட்டு மக்களைதான் சென்றடையும் என்பதை உணராதவரல்ல கமல். எனவேதான் சின்னத்திரை மூலம் அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து, பெண்கள் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுக்க முன்வந்தார்’ என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

அநீதியை தட்டிக்கேட்கும் கமல்

பிக்பாஸ் வீட்டுக்குள் நடத்தப்படும் அநீதிகளை, அந்த வார இறுதியில் தட்டிக்கேட்பார் கமல். எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் அநீதியை தட்டிக்கேட்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்ததன் தற்போதைய பரிமாண மாற்றம்தான் கமலின் இந்த நிகழ்ச்சி. இதன் மூலம், மக்கள் மத்தியில் அதிலும் பெண்கள் மத்தியில் கமல் மீதான அபிமானம் அதிகரித்துள்ளது. ‘விடாதீங்க.. இன்னும் நாளு கேள்வி அந்த காயத்திரிய கேளுங்க’ என்று இல்லத்தரசிகள் நிகழ்ச்சியை பார்த்தபடியே ஆர்ப்பரிப்பதுதான் கமலின் ராஜதந்திர வெற்றி.

திராவிட கொள்கை

திராவிட அரசியல், சித்தாந்தம் மீது தமிழகத்தின் பெருவாரியான மக்களுக்கு ஈர்ப்பு உள்ளது என்பதை நன்கு கணித்து வைத்துள்ளார் கமல். திராவிட கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு வழக்குகள், விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தாலும், திராவிட கொள்கைக்கான தேவை உள்ளது என்பது கமலின் அபிப்ராயம். எனவே திராவிடத்திற்கு ஆதரவாக பல கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறார். கருணாநிதிக்கு பிறகு வார்த்தை விளையாட்டுகளில் திறம்பட ஈடுபடுகிறார் என்ற தோற்றத்தையும் திராவிட ஆதரவாளர்கள் மத்தியில் கமல் ஏற்படுத்தியுள்ளார்.

மா.கம்யூனிஸ்ட்

இந்த நிலையில்தான் பெரும் ஊழல் புகார்களில் சிக்காத கட்சியாக பார்த்து அரசியல் பிரவேசம் செய்ய நினைக்கிறார் கமல். அதற்காக அவர் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைத்துக்கொள்ள காய் நகர்த்துவதாகவே தெரிகிறது. சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க திருவனந்தபுரம் சென்ற கமல், தான் இங்கு அரசியல் கற்க வந்துள்ளதாக பகிரங்கமாகவே தெரிவித்தார். மேலும் வரும் 16ம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செமினாரில் கமல் பங்கேற்க உள்ளார்.

கொள்கையை மாற்றிய தோழர்கள்

கமல் சொந்த கட்சி ஆரம்பித்து வாக்குகளை பெறுவதில் நம்பிக்கை இழந்துவிட்டார். வேர்மட்டத்தில் தொண்டர்கள் இருந்தால்தான் வளர முடியும் என்பதில் அவருக்கு நம்பிக்கையுள்ளது. நடிகர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிறுத்துவது இல்லை என்பது கொள்கை. ஆனால் மக்கள் நல கூட்டணி தலைமைக்கு தேமுதிகவை முன்னிறுத்தியபோதே, கம்யூனிஸ்ட் கட்சிகள் காலத்திற்கு ஏற்ப மாறத்தொடங்கிவிட்டது தெளிவாகிவிட்டது. எனவே கமலை தங்களோடு இணைப்பதில் தமிழக ‘தோழர்களுக்கு’ தயக்கம் இருக்காது என நம்பலாம்.

கமலுக்கு ஏற்ற காலம்

தமிழகம் அசாதாரண அரசியல் சூழலில் சிக்கி திணறிக்கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் கமல் போன்ற கொள்கை பிடிமானமுள்ள நபர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்பதே கமல் நண்பர்களின் அட்வைசாக உள்ளதாம். எனவே அடுத்தடுத்த நாட்களில் கமல் தன்னை அதிகாரப்பூர்வ அரசியல்வாதியாக அறிவிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close