Breaking News
Home / பொழுதுபோக்கு / நெஞ்சம் மறப்பதில்லை – 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்!

நெஞ்சம் மறப்பதில்லை – 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்!

நெஞ்சம் மறப்பதில்லை – 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்!

நெஞ்சம் மறப்பதில்லை – 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகநடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் நடிப்புலகிலிருந்து விலகிய வரையிலும் அவரால் எந்தபடமும் வெளிவராமல் நின்று போனதில்லை. தான் கதாநாயகனாக நடிக்கின்ற படங்கள் எந்தக் காரணத்திற்காக வெளிவராமல் நின்றுப் போனாலும் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று திரையுலகில் பேசத் தொடங்கி விடுவார்கள் என்பதால் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இயக்குநரால் படத்தை சரியாக இயக்க முடியுமா? தயாரிப்பாளரால் படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா? போன்ற விஷயங்களை விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகுதான் படத்தை ஏற்றுக் கொள்வார்.

சினிமாவில் நுழைந்து நடித்து வளர்ந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால்போதும் என்று ஆர்வக் கோளாறினால் ஏற்றுக்கொண்ட சில படங்கள் பூஜையோடும், சில நாட்கள் நடந்த படப்பிடிப்போடும் நின்று போயிருக்கின்றன. அவர் முதன்முறையாக நடித்த ‘சாயா’ படமும் எடுத்துமுடித்து வெளிவராமல் போனது. ‘அதிரூப அமராவதி’ என்ற படமும் நடித்து முடித்து கொடுத்தும் வெளிவராமல் நின்றுபோனது. ‘மாடிவீட்டு ஏழை’ நடிகர் சந்திரபாபுவின் தவறான நடவடிக்கைகளால் நின்றுபோனது.

ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவன்’ படம் நீண்ட மாதங்கள் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே போனது. பி.ஏ. தாமஸ் தனது தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து புதிய இயக்குநர் சிங்கமுத்துவுடன் இணைந்து இயக்கினார்.

இதில் எம்.ஜி.ஆர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ‘கண்ணன் என் காதலன்’ (1968) படத்திற்கு பிறகு வாணிஸ்ரீ இணைந்து நடித்தார். இவர்களுடன் எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், ஒ.ஏ.கே.தேவர், நாகேஷ், ஜோதிலட்சுமி, மனோரமா, சி.எஸ்.பாண்டியன், திருச்சி சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். வசனம் ஆர்.கே.சண்முகம், ஒளிப்பதிவு பி.எல்.நாகப்பா, சண்டைப்பயிற்சி மாடக்குளம் அழகிரிசாமி.

கருப்பு வெள்ளை படத்திலிருந்து கலருக்கு மாறிவிட்ட காலம் அது. எம்.ஜி.ஆரின் ‘ரகசிய போலிஸ் 115’ (1968), ‘குடியிருந்த கோயில்’ (1968), 100வது படமான ‘ஒளிவிளக்கு’ (1968), ‘அடிமைப் பெண்’ (1969), ‘நம்நாடு’ (1969) போன்ற படங்கள் கலரில் எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி கண்டன. ‘தலைவன்’ (1970) படம் மட்டும் எடுத்து முடிக்கவும் முடியாமல் வெளியிடவும் முடியாமல் கருப்பு வெள்ளையில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு எடுக்கப்பட்ட படங்களான ‘என் அண்ணன்’ (1970), ‘மாட்டுக்கார வேலன்’ (1970), ‘எங்கள் தங்கம்’ (1970), ‘தேடி வந்த மாப்பிள்ளை’ (1970) ஆகிய படங்கள் கலரில் வெளி வந்தன.

‘ஒரு தாய் மக்கள்’ (1971), ‘அன்னமிட்ட கை’ (1972) போன்ற படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதால் ‘தலைவன்’ படத்தையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்தனர்.

ஆனால் பி.ஏ.தாமஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் படத்தை முடித்து வெளியிட முடியாமல் போனது. இந்த தாமதத்துக்கு எம்.ஜி.ஆர் எந்த வகையிலும் காரணமல்ல, தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸும் காரணமல்ல, பைனான்ஸ் பிரச்சனையும் இல்லை. ஆனால் ‘தலைவன்’ படத்தை எடுத்து முடிக்க முடியாமலும் வெளிட முடியாமலும் திணறிக் கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். சரியாகக் கால்ஷீட் கொடுக்காததால் படத்தை முடிக்க முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு, தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பைனான்ஸ் கேட்டு அலைந்துக் கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இதையறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரை நேரில் அழைத்துப் பேசினார்.

‘என்ன பிரச்சனை? ஏன் படப்பிடிப்புகளை முடித்து படத்தை வெளியிட முயற்சி செய்ய மாட்டேங்கறீங்க? ஏதாவது பைனான்ஸ் பிராப்ளமா? நான் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்,’ என்று கேட்டார்.

‘பைனான்ஸ் பிராப்ளம் ஒன்றுமில்லை. என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ஏன்னு புரியவில்லை,’ என்று தயாரிப்பாளர் தாமஸ் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் ‘தலைவன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து வெளியிடுவதற்கான பொறுப்பைதானே ஏற்றுக் கொண்டார். தயாரிப்பாளரும் படப்பிடிப்பிற்கான மொத்த செலவுக்கான பணத்தை எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்தார். எம்.ஜி.ஆரும் கவனமாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் ஏதாவதொரு தடை வந்துக் கொணடிருந்தது.

‘என்ன இது… ஒரே மர்மமாக உள்ளதே’ என யோசிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். படத்தின் வசனகர்த்தா ஆர்கே சண்முகத்தை வரவழைத்து படத்தின் மொத்த வசன காட்சிகளையும் படித்துக் காட்டச் சொன்னார்.

ஆர்.கே.சண்முகமும் படத்தின் முழு வசனத்தையம் படித்துக் காட்டினார். அதில் தடை ஏற்படுகின்ற வகையில் எந்தக் காட்சியும், வசனமும் இல்லை.

அதன்பிறகு படத்தின் பாடலாசிரியர் கவிஞர் வாலியை வரவழைத்து படத்தின் தாமதம் குறித்துப் பேசினார். அதற்கு கவிஞர் வாலி படத்தின் தயாரிப்பாளர் பெயரும், நிறுவனத்தின் பெயரும்தான் அதற்கு காரணம் என்று கூறிவிட்டார். தயாரிப்பாளர் தாமஸ், தாமஸ் பிக்சர்ஸ். படம் ‘தாமஸ’மாவதற்கு இதுதான் காரணம் என்றார்.

எம்.ஜி.ஆர்.விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, ‘ஓ… இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,’ என்று சொன்னார்.

‘இந்தப் படத்திற்காக நீங்கள் எழுதிய பாடல் வரிகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்,’ என்றார் எம்.ஜி.ஆர்.

வாலி தன் பாடல் வரிகளை சொல்லத் தொடங்கினார். ‘அறிவுக்கு வேலைக் கொடு…’, ‘பாய் விரித்தது பருவம்…’, ‘ஓடையிலே ஒரு தாமரைப்பூ…’, ‘நீராழி மண்டபத்தில்…’ என்று பாடல் வாரிகளைச் சொன்னார்.

குறுக்கிட்ட எம்.ஜி.ஆர், ‘நீராழி மண்டபத்தில்…’ பாடல் வரிகளை விளக்கமாகச் சொல்லச் சொன்னார்.

‘நீராழி மண்டபத்தில்

தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்

தலைவன் வாராமல்

காத்திருந்தாள் பெண்ணொருத்தி

விழிமலர் பூத்திருந்தாள்,

நாடாளும் மன்னவனின்

இதயத்தின் சிறையில்

தனிமை தாளாமல் தவித்திருந்தாள்…’ என்று வாலி பாடல் வரிகளைச் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.

‘போதும் போதும் நிறுத்துங்க… இந்தப் பாடலில் உள்ள ‘தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்…’ இந்த வரிகளில் உள்ள அறச் சொல்தான் படத்தை இந்தப் பாடுபடுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே என்படங்களில் வசனத்திலோ, பாடல்களிலோ இது போன்ற அறச்சொல் வராமல் பார்த்து கொள்வேன், என் படம் பார்க்கின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் தான் வசனமும் இருக்கும் பாடல்களும் இருக்கும். பொதுவாக யாரேடும் பேசும்போதோ, பாடும்போதோ, பாடல் எழுதும்போதோ, இதுபோன்ற அறச்சொல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலநேரங்களில் நமது வாழ்க்கையையே கூடபாதித்துவிடும்… ஏனென்றால் தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்,’ என்றார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.சொன்னது உண்மை. தமிழின் வல்லமை, மகத்துவம் அப்படி. பல திரையுலகக் கலைஞர்களின் வாழ்க்கையையே இதுபோன்ற அறச்சொற்கள் பாதித்திருக்கின்றன என்பது உண்மைதான்.

இப்படித்தான் எம்.கே.தியாகராஜபாகவதர் தான் நடித்த ஒரு படத்தில் ‘பாடமாட்டேன் இனி பாடமாட்டேன் அப்பனை (சிவன்) பாடிய வாயால் இந்த சுப்பனை (முருகன்) பாடமாட்டேன் என்று பாடினார். இதேபோன்று நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி அப்படித்தான் ஒரு படத்தில் ‘பாட மாட்டேன் இனி பாட மாட்டேன் வாய்திறந்து இனி பாடமாட்டேன்’ என்று ஒரு படத்தில் பாடி நடித்தார். அதன்பிற்கு அவர் எந்தப்படத்திலும் பாடி நடிக்கவில்லை. அத்தோடு இந்த மாபெரும் கலைஞர்களின் கலையுலகப் பயணமும் முடிந்தது.

எம்ஜிஆர் சொன்னது போலவே, அந்த அறச் சொற்கள் மாற்றப்பட்ட பிறகு, ‘தலைவன்’ பட வேலைகள் பரபரவென தடையின்றி முடிவடைந்தன. ‘தலைவன்’ படத்தை எம்.ஜி.ஆரே வெளியிட்டார்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close